தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு ஐந்து ரூபாய் அதிகரிப்பு

தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு ஐந்து ரூபாய் அதிகரிப்பு

2 mins read
62304818-723e-409c-8c2d-4916b427b164
மழை நீரில் வீணாகும் நெல் மூட்டைகள். - கோப்புப் படம்: கிரிஷ் ஜாக்ரன்
Google News Preferred Icon

சென்னை: சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு ஐந்து ரூபாய் அதிகரித்துள்ளது.

கர்நாடகா, ஆந்திராவில் இருந்து அரிசி வரத்து குறைந்திருப்பதை அடுத்து, சன்ன ரக அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தஞ்சை உள்ளிட்ட தமிழக டெல்டா மாவட்டங்களில் ‘மோட்டா’ ரக அரிசி அதிக அளவில் விளைகிறது. அரசு செயல்படுத்தி வரும் பொது விநியோகத் திட்டத்துக்கு இந்த வகை அரிசிதான் கொள்முதல் செய்யப்படுகிறது.

சன்ன ரக அரிசி குறைந்த அளவே விளைச்சல் காண்கிறது. தமிழகத்தின் அரிசித் தேவை ஆண்டுக்கு 91 லட்சம் டன் ஆகும். 75 லட்சம் டன் உற்பத்தியாகும் நிலையில், ஐந்து லட்சம் டன் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் பற்றாக்குறை 21 லட்சம் டன் ஆகும்.

இதையடுத்து, பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அரிசி வரவழைக்கப்படுகிறது.

இந்நிலையில், நடப்பாண்டு கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. இதனால் சன்னரக நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதால் தமிழகத்துக்கான நெல் வரத்து குறைந்துள்ளது என்றும் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சன்னரக அரிசி மூட்டையின் கொள்முதல் விலை தற்போது ரூ. 1,250ஆக உயர்ந்துள்ள நிலையில், மொத்த விலைச் சந்தையில் கிலோவுக்கு 3-4 ரூபாய் வரை உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள வியாபாரிகள், சில்லறைச் சந்தையில் அரிசி விலை கிலோவுக்கு 5-7 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
அரிசிநெல்விலைமாநில அரசுகிடங்கு