சென்னை: அண்மையில் பெய்த கனமழை காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வள ஆதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பரில் 24 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வள ஆதாரத்துறை புள்ளி விவரங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலத்தடி நீர் கண்காணிப்புக் கிணறுகள் மூலம் மாதந்தோறும் நீர்வள ஆதாரத்துறையானது நிலத்தடி நீர்மட்டத்தைக் கணக்கிட்டு வருகிறது.
இந்நிலையில், அண்மைய சில வாரங்களாகத் தமிழகத்தில் தொடர்ந்து ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை, வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாகப் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிகபட்சமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் இரண்டு மீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல் பெரம்பலூரில் 1.67 மீட்டர், விழுப்புரம் 1.52 மீட்டர், சேலம் 1.12 மீட்டர், நாமக்கல்லில் 0.98 மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வள ஆதாரத்துறை தெரிவித்துள்ளது.
24 மாவட்டங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ள போதிலும், 13 மாவட்டங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
அதிகபட்சமாக தஞ்சாவூரில் நீர்மட்டம் 1.02 மீட்டர் குறைந்துள்ளது. இதேபோல் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, நெல்லை, குமரி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
இம்மாவட்டங்களில் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.