சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் நீர் தேங்கியிருப்பதால், எலிக்காய்ச்சல் போன்ற தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
மழைநீரில் வெறுங்கால்களில் நடக்க வேண்டாம் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “எலிக்காய்ச்சல் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றும் நோயாகும். சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றை அந்நோய் பாதிக்கும்.
“பாதிக்கப்பட்ட நாய்கள், பன்றிகள், கால்நடைகளின் சிறுநீா் மூலமாகவும் எலிகளின் கழிவு மூலமாகவும் மனிதர்களுக்கு இந்நோய் பரவுகிறது. எனவே, உயிரினங்களின் கழிவுகள் கலந்திருக்கும் மழைநீரில் கால் வைத்தால் நமது உடலிலும் தொற்று ஊடுருவ வாய்ப்புள்ளது.
“ஒவ்வோர் ஆண்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தவிர்க்க தேங்கியிருக்கும் மழை நீரில் வெறும் கால்களில் நடக்கக் கூடாது,” எனத் தெரிவித்தது.
மேலும், எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், கல்லீரல், சிறுநீரக பாதிப்புக்குள்ளானோர், புற்று நோயாளிகள் உள்ளிட்டோருக்குத் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இதுகுறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்,” என சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.

