கடலூர்: தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளைத் தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளும் விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதனை நம்பியுள்ள எண்ணற்ற ஊர்களில் விவசாயத்திற்கு தண்ணீர்ப் பற்றாக்குறை நீங்கியுள்ளது. அதையடுத்து கடவுளுக்கு நன்றிசொல்லும் வகையில், கடலூர், நெல்லிக்குப்பம் ஆகிய ஊர்களில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
நீருக்கு ஆதாரமான ஆற்றுக்கு நன்றி சொல்லும் விதமாக ஆண்டுதோறும் தை ஐந்தாம் நாள் தென்பெண்ணை ஆற்றையொட்டியுள்ள பகுதிகளில் இந்த ஆற்றுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. முக்கியமாக ஆற்றுத் திருவிழா தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.
இதை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலையிலேயே கடலூர், வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், பச்சையாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், ஆனைக்குப்பம், குண்டுஉப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நாணமேடு உள்ளிட்ட ஏராளமான சிற்றூர்ப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்குக் கொண்டு வரப்பட்டன.
கடலூர் மற்றும் சுற்றியுள்ள சிற்றூர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஆற்றுத் திருவிழாவில் கலந்துகொண்டு கடவுளை வழிபட்டனர். இதில் பலர் ஆற்றில் புனித நீராடிய பின் கடவுளை வழிபட்டனர். ஆற்றுத் திருவிழாவில் மட்டுமே கிடைக்கும் சுருளிக் கிழங்குகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
ஆற்று திருவிழாவில் கூட்டம் அதிகரித்ததால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கடலூர் மாவட்ட காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இந்த ஆற்றுத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து மக்கள் கலந்துகொண்டனர்.

