சென்னை: கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு அடிக்குமேல் நீர் செல்வதால் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபெங்கல் புயல் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பெருமழை கொட்டித் தீர்த்தது.
அதன் காரணமாக சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர், திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது.
மேலும், சித்தனி அருகே கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு வெள்ளநீர் சூழ்ந்ததால் திங்கட்கிழமை (டிசம்பர் 2) காலையில் ஒருவழியில் மட்டும் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது.
பின்னர் தேசிய நெடுஞ்சாலையின் இரு வழித்தடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.
அதனால், பல கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் பேரின்னலுக்கு ஆளாயினர்.
இதனையடுத்து, சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், சாலைவழி போக்குவரத்தை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஆயினும், வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது என்றும் சில மணி நேரத்தில் மீண்டும் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படலாம் என்றும் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
ரயில்கள் ரத்து
இதனிடையே, சென்னையிலிருந்து விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்தது.
விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையிலான ரயில்வே பாலத்தின்கீழ் அபாயகரமான அளவில் வெள்ளநீர் சென்றதால் அவ்வழியே இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
சில ரயில்கள் மட்டும் மாற்று வழித்தடத்திலும், சில ரயில்கள் சென்னை - விழுப்புரம் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாகர்கோவிலிருந்து சென்னை தாம்பரத்திற்கு இயக்கப்பட்ட ரயில் விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டு, அதன் பயணிகள் அனைவரும் விழுப்புரத்திலேயே இறக்கிவிடப்பட்டனர்.
இந்நிலையில், பயணிகளுக்கு உதவுவதற்காக உதவி எண்களையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.