சென்னை: சென்னையில் உள்ள சாலைக்கு வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பெயர் சூட்டப்படும் எனத் தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் த. சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வசிக்கும் மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தினரை நேரில் சந்தித்துப் பேசியபோது, அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொண்டு வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜனுக்கு இந்திய அரசு அசோக் சக்ரா விருது வழங்கிக் கௌரவித்தது.
இந்நிலையில், தாம்பரம்-வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜனின் பெயரைச் சூட்ட தாம்பரம் மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முகுந்தின் பெற்றோரைச் சந்தித்தபோது, சாலைப் பெயர் மாற்றத்துக்கான அரசின் இறுதி ஒப்புதலை விரைந்து பெற்றுத் தருமாறு அமைச்சரிடம் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைச் சித்திரிக்கும்விதமாக தமிழில் ‘அமரன்’ என்ற பெயரில் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

