தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஞ்சிபுரத்தில் ‘ரோபோட்டிக்’ இயந்திர பாக உற்பத்தி தொழிற்சாலை திறப்பு

2 mins read
44fb7027-085d-40c7-b61b-e7a3b9657aa0
எஸ்ஓஎல் (SOL) இந்தியா நிறுவனம், தொழிற்சாலைகள், மருத்துவமனைக்கான உயிர்வாயு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘ரோபோட்டிக்’ இயந்திர பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மொத்தம் ரூ.300 கோடி முதலீட்டில் அமைந்த இந்தத் தொழிற்சாலையில், 300 உள்ளூர் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில், இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும் பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் தொழிற்சாலையானது, அனைத்து துறையினருக்கும் பயன்படும் வகையில் உருவாகி உள்ளது.

செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, புதிய தலைமுறை தானியங்கு தீர்வுகளை வழங்கும் ஜெர்மனியைச் சேர்ந்த அஜைல் ரோபோட்டிட்ஸ் (Agile Robots SE) நிறுவனம் இத்தொழிற்சாலையை நிறுவி உள்ளது.

இதேபோல், ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள SOL இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 175 கோடி ரூபாய் முதலீட்டில் அமைத்துள்ள காற்று பிரித்தெடுப்பு (Air Separation) ஆலையையும் முதல்வர் ஸ்டாலின் காணொளி வசதி மூலம் திறந்து வைத்ததாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

எஸ்ஓஎல் (SOL) இந்தியா நிறுவனம், தொழிற்சாலைகள், மருத்துவமனைக்கான உயிர்வாயு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது ரூ.200 கோடி முதலீடு என்ற வகையில், இந்நிறுவனம், தமிழக அரசுடன் காற்று பிரித்தெடுக்கும் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது.

அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, ரூ.175 கோடி முதலீட்டில் காற்று பிரித்தெடுக்கும் ஆலை நிறுவப்பட்டுள்ளது என்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது உறுதியளித்த முதலீடுகளும் இதில் அடங்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆலை மூலம் 20 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் இளையர்களுக்கு, அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டின் பொருளியலை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்குத் தேவையான முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு பொருளியல் ரீதியில் ஆக அதிக வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்