தேனி: தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் இருந்து உந்துகணைகளை விண்ணில் செலுத்தும் நடவடிக்கை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
2026 டிசம்பர் மாதத்துக்குள் இந்த மைல்கல் எட்டப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வருவதாகவும் இந்தத் திட்டம் 2040க்குள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
‘சந்திரயான்-5’ திட்டம், ‘சந்திரயான்-3’ போல் ஒரு ‘லேண்டர்’தான். ஏறக்குறைய நூறு நாள்கள் நிலவில் ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப்படுகிறது.
“இஸ்ரோவின் மூன்றாவது ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க உள்ளோம். இரண்டாவது ஏவு தளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 95% இடங்களை தமிழக அரசு ஒதுக்கி தந்துவிட்டது,” என்றார் நாராயணன்.