பராமரிப்புப் பணிக்காக பழனியில் கம்பிவண்டி சேவை தற்காலிக நிறுத்தம்

1 mins read
409ef803-c297-4270-936a-381de7fc956a
பழனி மலையடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் பலர் கம்பிவண்டி சேவையைப் பயன்படுத்துவது வழக்கம். - படம்: இணையம்

பழனி: பழனி முருகன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் படிப்பாதை வாயிலாகச் செல்லலாம். அதுமட்டுமல்லாது, மலையடிவாரத்தில் இருந்து கோயிலுக்குப் பக்தர்கள் எளிதில் சென்றுவரும் வகையில் கம்பி வண்டி, மின்இழுவை ரயில் சேவைகள் உள்ளன. இதில் பெரும்பாலான பக்தர்கள் கம்பிவண்டி சேவையை விரும்புவதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பழனி முருகன் கோயிலில் நாள்தோறும் இந்திய நேரப்படி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை கம்பிவண்டி சேவை இயக்கப்படுகிறது. பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை கம்பிவண்டி நிலையத்தில் தினசரி பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதேபோல் மாதத்துக்கு ஒருநாள், ஆண்டுக்கு ஒருமுறை 40 நாள்கள் எனக் கம்பிவண்டிப் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அப்போது அதன் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும்.

அதன்படி, இவ்வாண்டு பழனி முருகன் கோயில் கம்பிவண்டிக்கான வருடாந்திர பராமரிப்பு பணிகள் அக்டோபர் 7ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகின்றன. இதனை முன்னிட்டு கம்பிவண்டி சேவை அக்டோபர் 7ஆம் தேதியிலிருந்து பணிகள் நிறைவடையும் வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின்இழுவை ரயில் ஆகியவற்றை பயன்படுத்தி மலைக்கோவில் சென்று வரலாம் எனக் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்