திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் திடீரென கடல் சீற்றத்தால் புனித நீராடச் சென்ற பக்தர்கள் ஐவர் படுகாயமடைந்தனர்.
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கடந்த சில நாள்களாகவே திருச்செந்தூர் கடலில் மாறுபட்ட சூழல் நிலவி வந்தது. புதன்கிழமை (செப்டம்பர் 30) இரவு கடல்நீர் கிட்டத்தட்ட 150 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழக்கம்போல் கடலில் நீராடி இறை வழிபாடு செய்தனர்.
வியாழக்கிழமை அதிகாலை 3 மணி முதலே கடல் வழக்கத்திற்கு மாறாக கடுஞ்சீற்றத்துடன் காணப்பட்டது. அப்போது கடலில் புனித நீராடிக்கொண்டிருந்த சரோஜா, 42, குணசேகரன், 45, இலஞ்சியம், 55, ராஜகுமாரி, 52, கிருஷ்ணவேணி, 75, ஆகிய ஐந்து பக்தர்கள்மீது அலைகள் வீசின. இதனால் சிக்கிக்கொண்ட அவர்களின் கால்களில் எலும்புமுறிவு ஏற்பட்டது.
அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த கோவில் கடற்கரைப் பாதுகாப்புப் பணியாளர்களும் காவல்துறையினரும் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டனர். அவர்கள் அனைவரும் ‘108’ அவசர மருத்துவ ஊர்தி மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, திருச்செந்தூர் கடற்கரையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் கடலில் இறங்கும்போது எச்சரிக்கையுடனும் பாதுகாப்பாகவும் நீராடுமாறு கோவில் நிர்வாகமும் காவல்துறையும் கேட்டுக்கொண்டுள்ளன.
