சென்னை: சென்னை, பெசன்ட் நகரில், காவல்துறை அதிகாரிகள் சிலர் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பெண் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் நடத்தியதாக மனித உரிமை ஆணையத்திற்குப் புகார் வந்தது.
2013ஆம் ஆண்டு ஆர்.வாசுகி என்பவர் கொடுத்த அந்தப் புகாரின் அடிப்படையில் நடந்து வந்த விசாரணையில், ஆணையம் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்தது.
கடந்த 2013 ஜூலை 11 ஆம் தேதி மாலை 5 மணியளவில் அப்போதைய நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் எஸ்.ராஜசேகரன் (காஞ்சிபுரம்) உள்ளிட்ட 4 காவலர்கள், அத்துமீறி என் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் என் வீட்டுச் சுற்றுச்சுவரை அளவீடு செய்தனர். இதுகுறித்து கேள்வி எழுப்பிய என்னை கீழே தள்ளி, ஷூ காலால் உதைத்தனர்.
மேலும், புதுப்பாக்கத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரை ஏமாற்றி நிலம் வாங்கியதாக எனது கணவர் ராஜகோபாலை கைது செய்யப்போவதாகவும் அந்தக் காவலர்கள் அச்சுறுத்தினர்.
நிலம் வாங்கியதற்கான பணத்தைக் கொடுத்ததற்கான ஆதாரத்தை அவர்களிடம் காண்பித்தேன். ஆனால், அதை ஏற்க மறுத்து அவர்கள் என் கன்னத்தில் அறைந்து கடுமையாகத் தாக்கினர். மேலும் எனது 14 வயது மகனையும் தாக்கி மிரட்டினர். அதனால் படுகாயமடைந்த நானும் எனது மகனும் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் சிகிச்சை பெறவேண்டியிருந்தது என்று வாசுகி, தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு ரூ.1.50 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் தமிழக அரசு இழப்பீடாக வழங்கிவிட்டு, அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட காவலர்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என உத்தரவில் தெரிவித்துள்ளார்.

