அரியலூர்: தமிழகத்தில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவல்ல காலணித் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த மகிமைபுரத்தில் 130 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமையவிருக்கிறது. அங்கு, தைவான் நாட்டைச் சேர்ந்த டீன்ஷூஸ் (DeanShoes) நிறுவனம் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் காலணி உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவவுள்ளது.
இதன் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது கையெழுத்தானது. காலணி ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன,” என்றார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 243 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் பூங்கா அமைக்கப்பட்டு 30,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், “பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.24 கோடி செலவில் மருதையாற்றில் உயர்மட்ட பாலம், வெங்காய பாதுகாப்புக் கூடம், ரூ.56 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை, விடுதிக் கட்டடங்கள் கட்டப்படும். அரியலூரில் ஒரே இடத்தில் ரூ.101 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்படும்,” என்றும் திரு ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், காரை பகுதியில் 41 ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். ‘ஊட்டச்சத்தை உறுதிசெய்’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
தமிழக இளையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் பொருளியலை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்தவும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.