லண்டனில் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து

லண்டனில் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து

2 mins read
ebf035f0-8d1e-4ae7-a8a8-8c93bf52fdba
தமிழக அரசின் தொழில்துறை சார்பில், வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் ஐஏஎஸ், சம்வர்தனா மதர்சன் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் தலைவர் பாரி பெயிண்டர் ஆகியோர் ஒப்பந்தங்களை முறைப்படி பரிமாறிக்கொண்டனர். - படம்: தினமணி
multi-img1 of 2

லண்டன்: தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில், முன்னணி அனைத்துலக நிறுவனமான சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.) ஏறக்குறைய ரூ.11,000 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) கையெழுத்திட்டது.

இதன்மூலம் தமிழகத்தில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (தளவாட வசதிகள்) ஆகிய பல்வேறு முக்கியமான துறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. இதன்மூலம் மாநிலத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏறக்குறைய 7,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் தொழில்துறை சார்பில், வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் ஐஏஎஸ், சம்வர்தனா மதர்சன் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்துதல் தலைவர் பாரி பெயிண்டர் ஆகியோர் ஒப்பந்தங்களை முறைப்படி பரிமாறிக்கொண்டனர். பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி இந்நிகழ்வில் உடனிருந்தார்.

இதுகுறித்து முதல்வர் விஜய் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லவும் இளையர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த முதலீடு பெரும் பங்காற்றும்,” என்று தெரிவித்துள்ளார்.

திறன் மையங்கள் மூலம் 2,600 வேலை வாய்ப்புகள்

இதனிடையே, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை நிறுவுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் ஏதுவாக தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் இரண்டு முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

இதன்மூலம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில்துறை வளர்ச்சி அடைவதுடன் ஏறக்குறைய 2,600 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி அனைத்துலகத் தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று சென்னையில் தனது உலகளாவிய திறன் மையத்தை அமைக்கிறது.

இதற்காகத் தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், பிரபல ஆலோசனை நிறுவனமான ஏர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) ஆகியவை இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

ஏறக்குறைய ரூ1,000 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும் இந்தப் புதிய மையம் மூலம் 2,000க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இதேபோல், ஸ்வீடன் நாட்டின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான ‘சிக்மா டெக்னாலஜி குரூப்’, இந்தியாவில் உள்ள தனது ‘ஸ்ரியா சொல்யூஷன்ஸ்’ நிறுவனம் மூலம் திருச்சி, சென்னையில் இயங்கும் தனது திறன் மையங்களை விரிவாக்கம் செய்கிறது.

இந்த நடவடிக்கைகள் வழி நவீன தொழில்நுட்பத் துறைகளில் ஏறக்குறைய 600 உயர்மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

குறிப்புச் சொற்கள்
முதல்வர்விஜய்லண்டன்பயணம்முதலீடுஒப்பந்தம்வேலைவாய்ப்பு