ரூ.2,053 கோடி வருவாய் இழப்பு: கோவை மாநகராட்சி வரிவசூலில் முறைகேடு

ரூ.2,053 கோடி வருவாய் இழப்பு: கோவை மாநகராட்சி வரிவசூலில் முறைகேடு

கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

26 Nov 2026 - 6:22 pm

2 mins read

கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சியில் 2012 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற வரவு-செலவுக் கணக்குகளில் விரிவான தணிக்கை நடத்தப்பட்டதில், வரிவசூலில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து தமிழக ஊடகங்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

தணிக்கைத் துறை இயக்குநரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஏழு முக்கியப் பிரிவுகளை ஆய்வு செய்து, 419 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.

சொத்து வரி, திடக்கழிவு மேலாண்மை, எல்இடி விளக்குகள் கொள்முதல் உள்ளிட்ட பிரிவுகளில் நடந்த இந்த ஆய்வுகள் மூலம், மாநகராட்சிக்கு ஏறக்குறைய ரூ.2,053 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தணிக்கை அறிக்கையின்படி, குடியிருப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரி விகிதத்தையே தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கும் விதித்ததன் மூலம் மாநகராட்சிக்குப் பேரிழப்பு நேர்ந்துள்ளது.

குறைவான வரியை நிர்ணயிக்க அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களுக்குக் குடியிருப்புச் சொத்து வரி விதித்ததில் ரூ.87.17 கோடியும் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பை வணிகப் பயன்பாட்டுக்கு வழங்கியதில் ரூ.158.31 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், முறைகேடாகச் சொத்துவரித் தள்ளுபடி வழங்கியதில் ரூ.34.60 கோடியும் அனுமதியற்ற கட்டடங்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல் சொத்து வரி விதித்ததில் ரூ.274 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்கத் தவறியதால் ரூ.82.25 கோடி வருவாய் பறிபோயுள்ளது.

ஒப்பந்தப் பணிகள், வரிச்சலுகைகளில் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புத் துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்