சென்னை: தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.23.5 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதன் தொடர்பில் ஒரு பெண் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டனர். அம்மூவரும் ஒரே குடும்பத்தினர் எனச் சொல்லப்படுகிறது.
ரகசியத் தகவலின் அடிப்படையில், இம்மாதம் 26ஆம் தேதி சென்னை வந்திறங்கிய அம்மூவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து, அவர்களின் உடைமைகளைச் சோதனை செய்தனர்.
அவற்றில் உறைய வைக்கப்பட்ட பழங்கள் அடங்கிய பொட்டலங்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டனர். அவற்றைப் பிரித்துச் சோதனையிட்டபோது, உள்ளே மொத்தம் 23.5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், பேங்காக் விமான நிலையத்தில் யாரோ ஒருவர் தங்களிடம் அப்பொட்டலங்களைத் தந்து, சென்னையில் ஒருவரிடம் தந்துவிடும்படி சொன்னதாக அவர்கள் கூறினர். அதற்காக அவர்களுக்கு ஆளுக்கு ரூ.15,000 தரப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
அம்மூவரும் விசாரணைக்காக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ‘ஹைட்ரோபோனிக்’ முறையில் நீரிலேயே வளர்க்கப்பட்டது என்றும் சந்தையில் அது ஓஜி, சுகர்கோன், குஷ் என்பன போன்ற பெயர்களில் குறிப்பிடப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.