சென்னை: தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 37,000 கிராமப்புற இளையர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்காக, ரூ.30.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த மாநில அளவிலான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
அப்போது, நடப்பாண்டு முதல் 10 தொழில்களில் புதிய திறன் பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என திரு ககன் தீப் சிங் குறிப்பிட்டார்.
“அதிக வேலைவாய்ப்புகளைக் கொண்ட கைப்பேசி பழுது நீக்குதல், ஓட்டுநர் உரிமம் பெறும் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல், கான்கிரீட் கொத்தனார் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சுப் பயிற்சி, இருசக்கர வாகன பழுது நீக்குதல், ஒயரிங், வெல்டிங் எனப் பல்வேறு தொழில்சார்ந்த திறன் பயிற்சிகள் வழங்கப்படும் என அவர் பட்டியலிட்டார்.
பயிற்சிகளை முடித்தவர்களுக்கு சுயதொழில் மேற்கொள்வதற்காக வங்கிக் கடன் உதவிகள் பெற்றுத் தரப்படும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி நிறுவனங்களுக்கு உண்டு, உறைவிட வசதியுடன் கூடிய தனி பயிற்சிக் கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் திரு ககன்தீப் மேலும் தெரிவித்தார்.
இளையர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பது, புதிய தொழிற்சாலைகள் அமைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இத்திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.

