வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்குவது குறித்துத் தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்த முக்கியத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தேர்தல் களம் மற்றும் ஆலோசனை: 2026-ம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, ஆளும் திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை (டிசம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பொங்கல் பரிசு விவரம்: பொங்கல் பண்டிகைக்கு அரசு என்ன சலுகைகளை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், இம்முறை பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டை வட்டாரத் தகவலின்படி, 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ‘அரிசி’ ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கமும் வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தொகுப்பில் என்னென்ன இருக்கும்? பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு, இலவச வேட்டி, சேலை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் இருக்கும்.
இப்பரிசுத் தொகுப்பு விநியோகத்தை ஜனவரி இரண்டாவது வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைப்பார்.
இதற்கான டோக்கன் விநியோகம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும். ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில், பொதுமக்கள் நேரடியாக ரேஷன் கடைக்குச் சென்று பரிசுத் தொகுப்பு, ரொக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஜனவரி 10ஆம் தேதிக்குள் பெரும்பாலானவர்களுக்குப் பொருள்கள் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையில், ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

