தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.5,000 கோடி முதலீடு; 50,000 பேருக்கு வேலை

2 mins read
dfe2e01c-f6c3-4af5-a81f-ebff3fde0dca
தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தமானது கையெழுத்தானதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் ஐம்பதாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.5,000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணித் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் கரூர், பெரம்பலூர் மாவட்ட மக்கள் அதிகம் பயனடைவர். இந்த தொழிற்சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தம் பிப்ரவரி 25ஆம் தேதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தமானது கையெழுத்தானதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

பெரும் அளவில் முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டு இளையர்ளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் மாநிலத்தில் பலவலான வளர்ச்சியை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக அந்த செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், தொழில்துறையில் பின்தங்கியுள்ள கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் மூலம் இளையர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் இதனால் அப்பகுதி மக்களின் தனிநபர் வருமானம் அதிகரிப்பதுடன் பொருளாதாரமும் மேம்படும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

எதிர்வரும் 2030க்குள் தமிழகத்தின் பொருளியலை ஒரு டிரியல்லன் டாலர் மதிப்புள்ளதாக மாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்த இலக்கை அடைவதற்கு அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டையும் நடத்தியது. இதற்காக சிங்கப்பூர், அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு அந்நாடுகளில் உள்ள பல்வேறு முன்னணித் தொழில் நிறுவனங்களில் உயர் அதிகாரிகள், தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசினார்.

முதலீடுகள் மூலம் தமிழகத்தில் லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தமிழக அரசு முன்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், புதிய காலணித் தொழிற்சாலை அமைவதன் மூலம் மேலும் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் எனத் தமிழக அரசு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்