ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியைக் காண இயலாதவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு

2 mins read
a1b3b4e1-2ae7-4c0b-bb10-71adc7797694
‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி 2023 செப்டம்பர் மாதம் நடைபெற்றது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாமல் போனதற்காக ஆடவர் ஒருவருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அர்ஜுன் என்பவருக்கு, இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனம் ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கவும். ரூ.5 ஆயிரத்தை வழக்கு செலவாக 2 மாதங்களில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023 ஆகஸ்ட்12ஆம் தேதி ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி சென்னை ஈசிஆரில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், மழை காரணமாக அந்த நிகழ்ச்சி அன்றைய தினம் ரத்து செய்யப்பட்டது.

பின்னர், 2023 செப்டம்பர் 10ஆம் தேதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஏற்கெனவே நுழைவுச்சீட்டு வாங்கியவர்கள் இசை நிகழ்ச்சிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த அர்ஜுன் என்பவர், அந்த இசை நிகழ்ச்சிக்கு வாகன நிறுத்த கட்டணத்துடன் ரூ.10 ஆயிரம் கொடுத்து நுழைவுச்சீட்டு வாங்கி இருந்தார்.

ஆனால் நிகழ்ச்சியைக் காண அவரால் இயலவில்லை. அதனால், சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தமது மனுவில், “2023 ஆகஸ்ட் 12ஆம் தேதி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து முறையான முன்னறிவிப்பு செய்யவில்லை. செப்டம்பர் மாதம் நடந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக செல்ல முடியவில்லை.

“எனவே எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும். நுழைவுச்சீட்டுக்கான கட்டணத்தை வட்டியுடன் திருப்பித்தர உத்தரவிட வேண்டும்,” என்று தெரிவித்து இருந்தார்.

மனுவை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், அர்ஜுனுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்