சென்னை: தமிழ்நாட்டில் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ரசாயன உர பயன்பாட்டைக் குறைக்க ரூ.600 கோடி செலவில் ‘தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்’ ஐந்தாண்டுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் இத்திட்டம் ரூ.122.51 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்.
தமிழகச் சட்டமன்றத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) நடப்பாண்டுக்கான பொது வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் வேளாண் வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார்.
அதில் மண்வளத்தைப் பாதுகாத்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, 20,000 ஏக்கரில் உயிர்ம வேளாண் முறைகளைப் பின்பற்றும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
நம்மாழ்வார் கல்லூரி, விருது
அத்துடன், சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், பயிர் விளைச்சல் போட்டிகளில் வெல்லும் விவசாயிகளுக்கு ‘அஞ்சலை அம்மாள் விருதும்’ வழங்கப்படும்.
தஞ்சை சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உயிர்ம விவசாயிகளுக்குச் சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும். நிரந்தர மண்புழு உரக் கூடங்கள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் நிலத்தின் தன்மையை அறிந்து சமச்சீர் உரமிடுவதற்காக ஒரு லட்சம் பேருக்கு ரூ.4 கோடி செலவிலும், உழவர் அடையாள எண் பெற்ற 3 லட்சம் பேருக்கு ரூ.6.16 கோடி செலவிலும் மண்வள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.
மண்வளத்தை மீட்டெடுக்க பசுந்தாள், பல்வகை தானிய விதைகள் மானியத்தில் விநியோகிக்கப்பட்டு, ஏக்கருக்கு ரூ.3,000 உழவு மானியம் என மொத்தம் ரூ.63.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திரவ உயிர் உரங்கள், பயிர் ஊக்கிகள் வழங்குவதற்காக ரூ.16.88 கோடியும், வளம் குறைந்த மண்ணைச் சீர்திருத்த ரூ.2 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, உயர்தர நெல் விதை உற்பத்தி, விநியோக மானியத்திற்காக ரூ.34.72 கோடி மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


