சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மூவாண்டுகளில் ரூ.6,792 கோடி மதிப்பிலான 7,609 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதே காலகட்டத்தில், மாநிலம் முழுவதும் 10,638 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2,226 கோவில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சென்னை திருவான்மியூரில் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 21) 31 இணையர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.60,000 மதிப்பில் கட்டில், மெத்தை, நிலைப்பேழை உள்ளிட்ட சீர்வரிசைகளை இந்து சமய அறநிலையத்துறை வழங்கியது.
அப்போது பேசிய முதல்வர், “கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வென்று திமுக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு, கோவில்களைப் பழமை மாறாமல் புதுப்பிக்க வல்லுநர் குழு ஒன்றை அமைத்து, அதன் ஆலோசனையின்படி செயல்பட்டு வருகி றோம்,” என்றார்.
சென்ற மூவாண்டுகளில் கோவில்கள் மூலம் 1,103 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான 2,724 கோவில்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்காக ரூ.426.62 கோடி மதிப்பீட்டில் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “தமிழில் குட முழுக்கு, தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதி அர்ச்சகர் எனப் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கோவில்களில் அன்னதானம் திட்டம் மூலம் நாள்தோறும் 92,000 பேர் பசியாறுகின்றனர்,” என்றும் திரு ஸ்டாலின் சொன்னார்.

