பள்ளிகளில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு

பள்ளிகளில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு

படம்: தினத் தந்தி

24 Nov 2026 - 5:12 pm

1 mins read

சென்னை: மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கப் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகளும் தன்னார்வக் குழுக்களும் அமைக்கப்படவுள்ளன. மாணவர்கள்,பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ‘10581’ என்ற உதவி எண் பள்ளி வளாகங்களில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்படும்.

மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் தகவல் தெரிவிக்க ஏதுவாக, ‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ எனும் செயலி மூலம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு குறித்த தகவல்களைப் பகிரும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவே அரசு 7 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் இலக்கானது பள்ளிகளிலிருந்தே தொடங்குவது மிகவும் அவசியம். ‘போதைப்பொருளுக்கு வேண்டாம் என்று சொல்லுங்கள்’ என்றும், ‘போதைப்பொருளை விடுங்கள், விளையாட்டை எடுங்கள்’ என்றும் தமிழக முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

‘இளமையில் கல்’ என்ற ஔவையாரின் ஆத்திசூடிக்கேற்ப, போதைப்பொருள், அவற்றின் தவறான பயன்பாடு குறித்த விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கைக் கல்வியும் இளம் தலைமுறையினரின் மனங்களில் பசுமரத்தாணியாகப் பதியச் செய்யப்பட வேண்டும் என அரசாணை வலியுறுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்