திருநெல்வேலி: நெல்லையில் ரூ.75 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளப் பணத்தாள்கள் காவல்துறைச் சோதனையின்போது சிக்கின.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக நாகர்கோவில் நோக்கிச் சென்ற ஒரு காரை நிறுத்தி காவல்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினர் சந்தேகமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் தீவிரமாக விசாரித்தபோது, 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளப் பணத்தாள்கள்களை அந்தக் காரில் மறைத்து எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
அதனையடுத்து, வாகனத்தில் கள்ளப் பணத்தாள்களுடன் வந்த சிவகாசியைச் சேர்ந்த சீமைசாமி, கோபாலகிருஷ்ணன், சங்கரன்கோவிலைச் சேர்ந்த கிருஷ்ண சங்கர், தங்கராஜ் ஆகிய நால்வரையும் காவல்துறை கைது செய்து, வழக்கு பதிந்தது.
மேலும், அவர்களிடமிருந்து எட்டுக் கைப்பேசிகள், அரிவாள், கள்ளப் பணத்தாள் தயாரிக்கும் கருவிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வளவு அதிகமாகக் கள்ளப் பணத்தாள் பிடிபட்டுள்ளது நெல்லைவாசிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா, கள்ளப் பணத்தாள்கள் எங்கு அச்சடிக்கப்பட்டன, எங்கிருந்து அவற்றை எடுத்துச் சென்றார்கள், இதே கும்பல் ஏற்கெனவே கள்ளப் பணத்தாள்களைப் புழக்கத்தில் விட்டுள்ளதா என்பது குறித்தும் காவல்துறை விசாரித்து வருகின்றது.

