துறைமுகத்திலிருந்து ரூ.9 கோடி மதிப்பிலான வெள்ளிக்கட்டிகள் மாயம்

1 mins read
927c87af-4b51-4855-b8ce-0a97c4337c51
சோதனையின்போது 922 கிலோ எடை கொண்ட 30 வெள்ளிக்கட்டிகள் மாயமானது தெரியவந்தது. - படம்: ஊடகம்

காஞ்சிபுரம்: காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து கொள்கலன் மூலம் லாரியில் கொண்டு செல்லப்பட்ட ஒன்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக்கட்டிகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் லண்டனில் இருந்து 39 டன் எடை கொண்ட 1,305 வெள்ளிக்கட்டிகளை இறக்குமதி செய்தது.

இதையடுத்து, லண்டனில் இருந்து அந்த வெள்ளிக்கட்டிகள், கடந்த மாதம் 30ம் தேதி கப்பல் மூலம் காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் துறைமுகத்திற்கு வந்தடைந்தன.

பின்னர் துறைமுகத்தில் இருந்து இரு கொள்கலன் லாரியின் மூலம் அவை காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு கடந்த 3ஆம் தேதி கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், அந்நிறுவனத்தார் மேற்கொண்ட வழக்கமான சோதனையின்போது 922 கிலோ எடை கொண்ட 30 வெள்ளிக்கட்டிகள் மாயமானது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், கொள்கலன்களில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியை ஆய்வு செய்தனர்.

அப்போது துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் ஒன்று கடந்த 2ஆம் தேதி இரவு திறக்கப்பட்டது தெரியவந்தது.

மாயமான வெள்ளிக்கட்டிகளின் மதிப்பு ஏறக்குறைய ரூ.9 கோடி எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்