சென்னை: தமிழகத்தில் மது விற்பனை தனியார்மயமாக்கப்படுவதாக வெளியான தகவல் புது விவாதங்களை எழுப்பியுள்ளது.
மது விற்பனைக்குப் பொறுப்பேற்றுள்ள ‘டாஸ்மாக்’ துறையைச் சீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.
அந்த முயற்சிகளைத் தவெக அரசு மேற்கொண்டதாகவும் அது தொடர்பாக அதிகாரிகள் அளவில் கலந்துரையாடல் நடந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
“இன்றளவும்கூட டாஸ்மாக் மதுக்கடை அல்லது மதுவிடுதிக்குச் சென்று பார்த்தால் குப்பைமேடாக இருக்கும்.
“யாரேனும் எங்கேயாவது படுத்திருப்பார்கள். இதைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா? அதனால்தான் இந்தத் துறையைச் சரிசெய்ய வேண்டும் என்கிறோம்,” என்றார் அமைச்சர் விக்னேஷ்.
அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்போது சிலர் டாஸ்மாக் கட்டமைப்பையே மாற்றியமைக்க வேண்டும் என்று கூறியதாகவும் சிலர் டாஸ்மாக் நிறுவனமே தேவையில்லை என்று வலியுறுத்தியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்ட சில அம்சங்கள் குறித்து மட்டும் வெளியே செய்தி கசிந்துள்ளது. அதை வைத்து யாரும் எந்த முடிவுக்கும் வரவேண்டாம்,” என்றார் அமைச்சர் விக்னேஷ்.

