தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்புமணியைக் கட்சியைவிட்டு நீக்குவேன்: ராமதாஸ்

2 mins read
34374e77-0c20-4931-8d7c-58700f6f9aa4
பாஜக கூட்டணி வேண்டும் என்று அன்புமணியும் சௌமியாவும் தன் காலைப் பிடித்துக் கெஞ்சியதாக மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். - படம்: ஊடகம்

விழுப்புரம்: தேவை ஏற்பட்டால் அன்புமணியைப் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தே நீக்கிவிடுவேன் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ராமதாசுக்கும் அவரது மகனுக்கும் இடையில் ஏற்கெனவே பூசல் நிலவி வரும் நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை (மே 29) செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்தார்.

அவர்களிடம் கூறுகையில், “அன்புமணியை அவரது 35வது வயதில் அமைச்சராக்கினேன். நான் செய்த சத்தியத்தை மீறி அவரை அமைச்சராக்கியது தவறு,” என்றார் ராமதாஸ்.

அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், தேவைப்பட்டால் பொதுக்குழுவைக் கூட்டி அன்புமணியை கட்சியைவிட்டே நீக்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

“எங்களின் கட்சி பற்றி பலமுறை கேள்வி கேட்டிருக்கிறீர்கள். நானும் பதில் சொல்லியிருக்கிறேன். தருமபுரியில் நடந்த கூட்டமொன்றில் அன்புமணி பேசியதை பார்த்திருப்பீர்கள், நானும் கேட்டேன்.

“அந்தப் பேச்சில், “நான் என்ன தவறு செய்தேன், ஏன் பதவி நீக்கம் என்று,” அன்புமணி கேட்டிருந்தார். அது கட்சிக்காரர்களையும் மக்களையும் திசைதிருப்பும் முயற்சி. தனது தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சிக்காரர்களிடமும் அனுதாபம் பெற முயற்சித்திருக்கிறார். அதற்கு சரியான விளக்கம் அளிப்பது எனது கடமை.

“என்னைக் குற்றவாளியாக்கி அன்புமணி அனுதாபம் தேட முயன்றுள்ளார்.

“கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு பயணித்தக் கட்சியில் அவர் கலகத்தை உண்டாக்கினார். வளர்த்த கிடா மார்பில் பாய்ந்துள்ளது. கட்சி வளர்ச்சிக்குத் தடையாக இருந்து பல இன்னல்களைச் செய்தவர் அன்புமணி.

“பாமக என்னும் ஆளுயுரக் கண்ணாடியை நொடியில் உடைத்தது யார்? புதுச்சேரி கூட்டத்தில் கண்ணியம் இல்லாமல் நடந்து கொண்டது யார்? நான் ஏதோ இதை போகிற போக்கில் சொல்லவில்லை. ஆதாரங்களுடன் தான் சொல்கிறேன்.

“குருவை, அன்புமணி கீழ்த்தரமாக நடத்தினார். பெற்ற தாய் மீது போத்தலை வீசித் தாக்க முயன்றவர் அன்புமணி.

“பாமகவை வளர்த்தது யார்? சோறு தண்ணீர் இல்லாமல் பல கிராமங்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன். கூசாமல் பொய் சொல்பவர் அன்புமணி. நான் கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு செல்லவேண்டாம் என்று 108 பேருக்கு அவரே கூறியுள்ளார்.

“2024 தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி வேண்டுமென்று கூட்டணி அமைத்தார் அன்புமணி. நான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறினேன். அதிமுகவும், பாமகவும் இயல்பான கூட்டணி.

“2024ல் இந்தக் கூட்டணி அமைந்திருந்தால் பாமக மூன்று இடங்களிலும் அதிமுக ஆறு, ஏழு இடங்களிலும் வென்றிருக்கும்.

“பாஜக கூட்டணிக்காக அன்புமணியும் சௌமியாவும் என் கால்களைப் பிடித்து அழுதனர். அந்தக் கூட்டணிக்கான ஏற்பாட்டை சௌமியா செய்தார்,” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்