சென்னை: ‘தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்’ எனும் நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் ஆக உயரிய விருதுகளில் ஒன்றாக சாகித்ய அகாடமி விருது கருதப்படுகிறது. இந்திய மொழிகளில் சிறந்த கவிதை, நாவல், சிறுகதை, இலக்கிய ஆய்வுகளுக்குச் சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
முன்னதாக, 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு நிகழ்ச்சி கடந்த 2025 டிசம்பர் மாதம் நடைபெற இருந்தது. ஆனால், விருதுகளை இறுதிசெய்வதில் இழுபறி நீடித்ததால் அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், அதிகாரத்துவ விருதுப் பட்டியலை சாகித்ய அகாடமி திங்கட்கிழமை (மார்ச் 16) வெளியிட்டது.
தமக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு தமிழ்ச்செல்வன், “இந்நூலை எழுத எனக்கு ஈராண்டுகள் தேவைப்பட்டன. ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளை வாசித்து, இந்நூலை எழுதியிருக்கிறேன்,” என்றார்.
இதனையடுத்து, அவருக்குப் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தமது வாழ்த்துச் செய்தியில், “தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும், குறிப்பாக தமிழ்ச் சிறுகதைகளின் பாரம்பரியம் குறித்து ஆழமான பார்வையை வழங்கும் இந்த நூலுக்குக் கிடைத்திருக்கும் இந்த உயரிய அங்கீகாரம், எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனின் இலக்கியப் பங்களிப்பிற்கான சிறந்த பாராட்டாகும். இவ்விருதைப் பெற்றிருப்பதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள பல எழுத்தாளர்களுக்கு இது ஊக்கம் அளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திரு தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு அருகிலுள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்தவர்.

