சென்னை: சாகித்திய அகாடமி தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதைப் பெரும் பேராசிரியர் ப.விமலாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்று சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் ப.விமலா மொழிபெயர்த்த ‘எனது ஆண்கள்’ நூலுக்கு இந்தாண்டுக்கான சாகித்திய அகாடமி தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நளினி ஜமீலா எழுதி 2018இல் வெளிவந்த ‘என்டே ஆணுங்கள்’ என்கிற மலையாள நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.
விமலா பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இதுவரை இவர் நான்கு நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்களுக்கும், இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வோருக்கும் கடந்த 1955ஆம் ஆண்டு முதல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியம் சார்ந்த விருதுகளில் இது உயரிய விருதாக பார்க்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயா்ப்பு சாகித்திய அகாடமி பரிசுக்கு 21 மொழிகளில் இருந்து புத்தகங்கள் தோ்வு செய்யப்பட்டன.
ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் விழாவில் சிறந்த மொழிபெயா்ப்பாளா்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கமும் கேடயமும் வழங்கப்படும் என்று சாகித்திய அகாடமி தெரிவித்துள்ளது.