தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொதுமக்களின் மனுக்களைப் பேருந்திலேயே விட்டுச்சென்ற அலுவலர் பணியிடைநீக்கம்

1 mins read
89e08048-0678-421b-ab86-3806f624dc4f
பேருந்தில் விட்டுச்செல்லப்பட்ட மனுக்களில் சில. - படம்: இந்திய ஊடகம்

சேலம்: பொதுமக்களின் மனுக்களை முறையாகக் கையாளத் தவறிய உதவி வட்டார வளர்ச்சி அலுவலரைச் சேலம் மாவட்ட ஆட்சியர் ஆர். பிருந்தாதேவி பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஆத்தூர் அரசநத்தம் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் சிலர், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் இலவச வீட்டுமனைப் பட்டா, இலவச வீடு, சாலை வசதி, கழிவுநீர் வடிகால் வசதி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, இம்மாதம் 4ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு மனு அளித்தனர்.

“மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், மறுநாள் அவற்றை உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ராஜிடம் ஒப்படைத்தார். அம்மனுக்களை எடுத்துக்கொண்டு, சேலத்திலிருந்து ஆத்தூருக்குத் தனியார்ப் பேருந்தில் சென்ற மோகன்ராஜ், கவனக்குறைவாக அவற்றைப் பேருந்திலேயே விட்டுச்சென்றுவிட்டார்.

“அம்மனுக்களைப் பார்த்த பேருந்து ஓட்டுநர் வீராச்சாமி, அதுகுறித்து மனுதாரர்களில் ஒருவரான காந்திமதி என்பவருக்குத் தகவல் தெரிவித்தார்,” என்று அதிகாரி ஒருவர் விளக்கினார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் அதுபற்றி விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவத்திற்கு ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டார்.

விசாரணையில், மோகன்ராஜ் கவனக்குறைவாக அம்மனுக்களைப் பேருந்தில் விட்டுச்சென்றதும் அவற்றை மீட்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, மோகன்ராஜ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்