சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒருவர் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
இவருக்குத் திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவருடைய வீட்டின் அருகே ஓர் அய்யனார் கோவில் உள்ளது. சேலம் போயர் தெருவைச் சேர்ந்த முத்தையன் என்பவர் அடிக்கடி வந்து வழிபட்டு செல்வார். அது மட்டுமில்லாமல் பில்லி, சூனியம் எடுப்பது, பெண்களை வசீகரம் செய்வது உள்ளிட்ட வேலைகளையும் சாமியார் வேடம் அணிந்து முத்தையன் செய்வார் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஓட்டுநருக்கும், முத்தையனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஓட்டுநருக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. இதனால் தனது 50 சென்ட் நிலத்தை 4 லட்சத்துக்கு முத்தையனிடம் ஓட்டுநர் கிரையம் செய்து கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நாளடைவில் ஓட்டுநரின் குடும்பத்தினருடன் முத்தையனுக்கு பழக்கம் அதிகமானது. அந்தப் பழக்கத்தால் நாளடைவில் ஓட்டுநரின் மனைவிக்கும், முத்தையனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இந்த விஷயம் ஓட்டுநருக்குத் தெரியவரவே 2 பேரையும் அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு மேல் முத்தையனுடன் பழக்கம் வைத்திருந்தால் நம் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும் என கருதிய ஓட்டுநர், சாமியார் முத்தையனுக்கு தரவேண்டிய பணத்தை வட்டியுடன் தயார் செய்து கொடுத்து விட்டு தனது நிலத்தைத் திரும்ப தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்தையன், உனது நிலத்தைத் திருப்பி கேட்டால் உன் மனைவியுடன் நான் ஆபாசமாக இருந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவேன் என கூறி மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் சின்னசேலம் காவல்துறையில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சின்னசேலம் காவல்துறையினர் முத்தையனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. முத்தையனின் மடிக்கணினியைக் காவல்துறையினர் சோதனை செய்ததில், அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த 50க்கும் மேற்பட்ட காணொளிகள் இருந்துள்ளன.
மேலும் அவரிடம் இருந்த 5 கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி, 5 பென்டிரைவ் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து முத்தையனை காவல்துறையினர் கைது செய்து, கள்ளக்குறிச்சி கோர்ட்டில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

