சென்னை: ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக, ரூ.815 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சாம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது அந்நிறுவனத்தின் வழக்கறிஞர் இத்தகவலைத் தெரிவித்தார்.
தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சாம்சுங் ஆலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சாம்சுங் இந்திய ஊழியர் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கம் தொடங்கியிருந்தனர்.
சங்கத்தைப் பதிவு செய்யக்கோரி ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டபோது, சாம்சுங் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என அந்நிறுவனத்தின் நிர்வாகத்தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சாம்சுங் சார்பாக உயர் நீதிமன்றத்தில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் வாதிடும்போது, ஒரு நிறுவனத்தின் பெயரில் தொழில் சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமையல்ல என்று குறிப்பிட்டார்.
மேலும் ஊழியர்களின் நீண்ட போராட்டத்தால் சாம்சுங் நிறுவனத்துக்கு ரூ.815 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சாம்சுங் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தாமல் தொழிற்சங்கம் தொடங்குவதில் ஆட்சேபம் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
எனினும், ஊழியர்கள் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் பிரசாத், தொழிற்சங்க சட்டப்படி சங்கத்தைப் பதிவு செய்வது அடிப்படை உரிமை என்றார்.
தென் கொரியாவிலும்கூட சாம்சுங் என்ற பெயரை பயன்படுத்தி தொழிற்சங்கம் உள்ளது என்றும் நிறுவனங்களின் பெயரில் பல தொழிற் சங்கங்கள் இயங்கி வருகின்றன என்றும் அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி, வழக்கை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.