தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாம்சுங் ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

2 mins read
b934d37a-d12e-4860-b554-82837fcc8c3c
ஊழியர்கள் மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது சக ஊழியர்களிடையே அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. - கோப்புப்படம்: தமிழக ஊடகம்

காஞ்சிபுரம்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சாம்சுங் ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்ற ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் மூவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சுங் ஆலையில் 2,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அங்குத் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி வழங்குதல், ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய ஊழியர்களின் போராட்டம் 30 நாள்களுக்கும் மேலாக நீடித்தது.

இறுதியில், போராட்டத்தை முன்னெடுத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைத் தமிழக அமைச்சர்கள் சிலர் சந்தித்துப் பேசி, போராட்டத்தைக் கொண்டுவந்தனர். அதனையடுத்து, அக்டோபர் 14ஆம் தேதிமுதல் ஊழியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பினர்.

இந்நிலையில், இவ்வாண்டு ஜனவரி 27ஆம் தேதி சிஐடியு தொழிற்சங்கம் பதிவுசெய்யப்பட்டது. இதனால் கோபமுற்ற சாம்சுங் நிர்வாகம், போராட்டம் நடத்திய ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை படிப்படியாக மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட பலர் ஏற்கெனவே பணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், இப்போது தொழிற்சங்கத்தில் இருந்து விலகுவதாக 400க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி நிறுவனம் கையெழுத்து வாங்கியதால் அங்கு மீண்டும் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

இச்சூழலில், தொழிற்சங்கம் அமைக்க அனுமதி கேட்டுப் போராடிய ஊழியர்கள் மூவரை சாம்சுங் ஆலை நிர்வாகம் திடீரெனப் பணியிடைநீக்கம் செய்து அறிவித்தது. இதனால் சக ஊழியர்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, சாம்சுங் ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்