சென்னை: பணி நிரந்தரம் கோரி போராடிவரும் துப்புரவுப் பணியாளர் தரப்புடன் அமைச்சர் கே.என்.நேரு ஆக்ஸ்ட் 6ஆம் தேதி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
ஏழாவது நாளாகத் தொடரும் அவர்களின் போராட்டத்தால் சென்னை மாநகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய பகுதிகளிலும் அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளிலும் உள்ள சில இடங்களைத் தவிர மற்ற பகுதிகளில் துப்புரவுப்பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய பகுதிகளில் மாநகராட்சி நிரந்தரப்பணியாளர்களும் ஒப்பந்தப் பணியாளர்களும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதிகளையும் தனியாரிடம் விட மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதால், வேலை இழப்பு, ஊதியக் குறைப்பு, பணி பாதுகாப்பின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதால் பணிநிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மட்டுமின்றி பணி புறக்கணிப்பும் செய்து வருகின்றனர்.
இதனால் ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய பகுதிகளில் ஆறு நாள்களாக குப்பைகள் அகற்றப்படாததால், சாலைகளில் குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுகிறது.