ராமதாசை சந்தித்த சசிகலா: புதிய அணிக்கு வாய்ப்பு

ராமதாசை சந்தித்த சசிகலா: புதிய அணிக்கு வாய்ப்பு

1 mins read
b4de2811-4941-4920-8b17-3a5cd7cecd3d
ராமதாஸ், சசிகலா. - படங்கள்: ஈடிவி பாரத்

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாசும் சசிகலாவும் சந்தித்துப் பேசியதன் மூலம் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய அணியை உருவாக்குவதற்கு இது தொடக்கப்புள்ளியாக அமையும் எனக் கருதப்படுகிறது.

பாமகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, ராமதாசும் அவரது மகன் அன்புமணியும் தனித்தனியாகச் செயல்படுகின்றனர்.

அன்புமணி தரப்பு அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டது. பாமக இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை.

இந்நிலையில், சசிகலா செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) திடீரென ராமதாசின் இல்லம் அமைந்துள்ள தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று அவரைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது அதிமுக, திமுக அல்லாத புதிய அணியை உருவாக்குவது குறித்து இருவரும் விரிவாகப் பேசியதாகத் தெரிகிறது.

அண்மையில் புதுக் கட்சி தொடங்குவதாக அறிவித்த சசிகலா, கட்சியின் கொடியை மட்டுமே வெளியிட்டார். இதுவரை கட்சிப் பெயரை அவர் அறிவிக்கவில்லை.

ராமதாசையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் இணைக்க அதிமுகவும் பாஜகவும் முயற்சி மேற்கொண்டுள்ளன. எனினும், அன்புமணிக்கு எதிரான கூட்டணியில்தான் இணைய வேண்டும் என்பதில் ராமதாஸ் உறுதியாய் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சசிகலா ஓரிரு நாள்களில் கட்சிப் பெயரை அறிவிப்பார் என்றும் அதன் பிறகு ராமதாசை மீண்டும் சந்தித்து கலந்தாலோசிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்