கனிமங்கள் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கனிமங்கள் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்: தினமலர்

10 Aug 2026 - 8:34 pm

2 mins read

சென்னை: தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதை விசாரித்த நீதிமன்றம் மனுவுக்குப் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்குப் போதுமான கருங்கல், ஜல்லிக் கற்கள் போன்ற கட்டுமானப் பொருள்கள் பரவலாகக் கிடைப்பதை உறுதி செய்யவும் செயற்கை விலையேற்றத்தைத் தடுக்கவும் தமிழ்நாடு சட்ட விரோதக் கனிமச்சுரங்கம், கனிமப் போக்குவரத்து, சேமிப்பு, தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை 9ஆம் தேதி திருத்தம் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் காரைக்கால், புதுவை தவிர மற்ற பகுதிகளுக்கும் மாநிலங்களுக்கும் கருங்கல், ஜல்லிக் கற்கள் கொண்டுசெல்ல மூன்று மாதங்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பிரேமநாதன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பான தமிழக அரசின் விதிமுறைகள் செல்லாது என அறிவிக்க வேண்டுமெனவும் அவர் கோரி உள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திருத்தப்பட்ட விதிகளுக்கு இந்திய அதிபரின் ஒப்புதலைப் பெறவேண்டும் என மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

உரிய உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிமங்கள் தங்களுக்குச் சொந்தமானவை என்றும் அவற்றை எங்கு விற்க வேண்டும் என முடிவெடுக்கத் தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்