சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகள், தெருக்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதியைக் குறிக்கும் வார்த்தைகள் நீக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், காலனி என்பது தீண்டாமைக்கான வகைச்சொல்லாக இருப்பதால், அந்த வார்த்தையும் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படுகிறது.
இது தொடர்பாக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழக அரசு சாதி, மதம், பாலினம், செல்வம், அதிகாரம் போன்ற வேறுபாடு இல்லாத, சம வாய்ப்புகள் கொண்ட சமூக அமைப்பை நோக்கிப் பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘காலனி’ என்ற சொல், ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமைக்கான குறியீடாகவும் வசைச் சொல்லாகவும் மாறியிருப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினரை இழிவுப்படுத்தும் வகையில் உள்ள, சாதி பெயர்களை நீக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
“அதைப் பின்பற்றி, குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள், பிற பொது உள்கட்டமைப்புகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குதல் அல்லது மறுபெயரிடுதல் பணியை துவங்க வேண்டும். இதைக் குறிப்பிட்ட காலவரம்பிற்குள் செயல்படுத்த வேண்டும்,” எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.