அமைச்சர் வன்னியரசு மீது விசாரணைக்கு கர்நாடக வனத்துறை உத்தரவு

அமைச்சர் வன்னியரசு மீது விசாரணைக்கு கர்நாடக வனத்துறை உத்தரவு

கோப்புப் படம்: தினத்தந்தி

20 Nov 2026 - 7:14 pm

2 mins read

நீலகிரி: பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி காட்டு யானைக்கு மிக அருகில் சென்றதாகத் தமிழக அமைச்சர் வன்னியரசு மீது எழுந்துள்ள புகார் குறித்து விரிவான விசாரணை நடத்த கர்நாடக வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, அண்மையில் தனது குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டம் முதுமலை, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது, புதர் மறைவில் இருந்த புலியை நெருங்கிச் சென்றதாகவும் பந்திப்பூர் வனப்பகுதியில் சஃபாரி வாகனத்தைக் காட்டு யானைக்கு மிக அருகில் கொண்டுசென்று கைப்பேசியில் காணொளி (ரீல்ஸ்) எடுத்ததாகச் சமூக ஊடகங்களில் காட்சிகள் வெளியாகின.

அவை பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, அமைச்சருக்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வன உயிரினப் பாதுகாப்பு அமைப்புகள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.

இது வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயல் எனக் குறிப்பிட்டு, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கும் புகார்கள் அனுப்பப்பட்டன.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

“காட்டு யானைக்கு மிக அருகில் சென்ற வாகனத்தின் பதிவு எண் காணொளிக் காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியுள்ளது என்றும் அதன் அடிப்படையில், வனவிலங்கு பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ராமலிங்க ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்.

யார் எந்த உயரிய பதவியில் இருந்தாலும், வனத்துறை விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
கர்நாடகாஅமைச்சர்புலிவனவிலங்குகாணொளிவனத்துறையானைவிசாரணை