சென்னை: நடிகர் சத்யராஜ் சென்னையில் திராவிடம் குறித்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு ‘திராவிடமே தமிழுக்கு அரண்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அப்போது அவர், “தம்பி அஜித் குமார் ஒரு காணொளி வெளியிட்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் சுற்றுலாப் பயணம் போவதைப் பற்றி அந்தக் காணொளியில் பேசியிருந்தார்.
சம்பந்தமே இல்லாத ஒரு மனிதனுக்கு கோபம் வருகிறது என்றால், அதற்குக் காரணம் மதம் தான். ஏதோ ஒரு நாட்டுக்குப் போகும் போது ஒருவரை பார்க்கிறோம். எந்த வாய்க்கால் வரப்பு சண்டையும் கிடையாது.
நீங்கள் பயணங்கள் மேற்கொண்டால் வெவ்வேறு நாடு, மதம், கலாசாரங்களைச் சேர்ந்த மக்களைச் சந்திப்பீர்கள். இதன்மூலம், நம்மைச் சுற்றியுள்ள மக்களின் உணர்வுகளை நன்கு புரிந்துகொள்ள முடியும். பயணம் உங்களை நல்ல மனிதனாக்கும்” என்று பேசியிருந்தார். மதம் தான், தேவையின்றி, நமக்கு அறிமுகமற்றவர் மீது தேவையில்லாத வெறுப்பை ஏற்படுத்துகிறது என்று நடிகர் அஜித், சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்ததை மேற்கோள் காட்டி சத்யராஜ் பாராட்டுத் தெரிவித்தார்.
திராவிடத்தை ஆரியம் எதிர்ப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. ஆனால், தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை எதிர்ப்பது ஆபத்தானது. இது ஆரியத்திற்கு துணை போவதாகும் என்று சத்யராஜ் கூறியுள்ளார்.
ஆரியத்துக்கு துணை போவதால் மீண்டும் சாத்திரம், சம்பிரதாயம், சடங்குகள் என மூடநம்பிக்கைகள் மேலோங்கும். தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ள இக்காலத்தில் நமக்கு இருமொழிக் கொள்கை தான் முக்கியம் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வட மாநிலங்களில் இருந்து தமிழ் நாட்டிற்கு வந்து வேலை செய்யும் பெரும்பாலானோர் அங்கே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே. ஏனெனில் இங்கு சாதிய ஒடுக்குமுறை ஒழிக்கப்பட்டுள்ளது.
மதக் கலவரங்களில் சிக்கிக் கொள்ளாமல் நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்றுதான் அவர்கள் தமிழ் நாட்டிற்கு வருகின்றனர். இதற்கு மூட நம்பிக்கைகளை எதிர்த்த திராவிடம்தான் காரணம் என்று அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் தவெக முதல் மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், “திராவிடமும் தமிழ்த் தேசியமும் கொள்கை அளவில் ஒன்றே” எனப் பேசியிருந்தார்.
அதற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், திராவிடமும், தமிழ்த் தேசியமும் ஒன்றாக முடியாது என்று அவர் விளக்கி தொடர்ந்து பேட்டிகளைக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், “தமிழ்த்தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை எதிர்ப்பது ஆரியத்திற்குத் துணை போவதாகும். இது மிகவும் ஆபத்தானது,” என்று சத்யராஜ் தெரிவித்துள்ளார்.