நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து சிறமடம் சிற்றூருக்குச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றின் நடத்துநர் மாணவி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அடுத்த நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் இதுகுறித்துத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர், ஊர் மக்களுடன் சேர்ந்து மீண்டும் அவ்வழியே வந்த அந்தப் பேருந்தை மறித்து, அதில் இருந்த நடத்துநரைப் பேருந்தில் இருந்து வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பூதப்பாண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் இருந்து அந்த ஓட்டுநரை மீட்டு காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த ஓட்டுநர் 54 வயது சசி என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

