பள்ளி வேன் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்து

1 mins read
994d1cf1-4c74-4b0f-94bf-51c2ef607886
விபத்துக்குள்ளான பள்ளி வாகனத்திலிருந்து மாணவர்களை மீட்கும் அப்பகுதி மக்கள். - படம்: ஊடகம்

கடலூர்:

அதிவேகமாக வந்த பள்ளி வாகனம் ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இயங்கி வரும் ஃபாத்திமா மெட்ரிக்குலேஷன் பள்ளியில், அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) காலை வழக்கம்போல் மாணவர்களை வேனில் ஏற்றிக் கொண்டு ஓட்டுநர் பள்ளிக்கு விரைந்தார்.

அவர் வாகனத்தை அதிவேகமாக இயக்கியதாகக் கூறப்படுகிறது.

அப்போது பூவனூர் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வேனின் நிறுத்துவிசை (பிரேக்) செயலிழந்ததால் தடுப்புக் கட்டை ஒன்றின்மீது வேன் மோதி தண்டவாளத்தில் தலைகுப்புற விழுந்தது.

அந்தச் சத்தத்தையும் பள்ளிக் குழந்தைகளின் அலறலையும் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், படுகாயங்களுடன் இருந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த நேரத்தில் ரயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், “அதிவேகமாக வேனை இயக்கிச் சென்ற ஓட்டுநரின் கவனக் குறைவுதான் விபத்துக்குக் காரணம்” எனக் கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

அதையடுத்து பள்ளி வேன் ஓட்டுநர்மீது ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
பள்ளிவேன்விபத்து