கடலூர்: தமிழகத்தின் கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனத்தின்மீது ரயில் மோதி மாணவர்கள் மூவர் உயிரிழந்த விபத்து தொடர்பில் விசாரணைக்கு முன்னிலையாகும்படி 13 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) நேர்ந்த அவ்விபத்தில் மற்றொரு மாணவர் உட்பட மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து ரயில்வே உயரதிகாரிகளும் காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி கோட்டை ரயில்வே காவல்துறை சார்பில் முதற்கட்டமாக 13 பேருக்கு விசாரணைக்கு முன்னிலையாகும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, ஆலப்பாக்கம் ரயில் நிலைய அதிகாரிகள் அஜித்குமார், விமல், பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர், ரயில் ஓட்டுநர் சக்திகுமார், உதவி ரயில் ஓட்டுநர் ரஞ்சித் மீனா உள்ளிட்டோர் அந்த 13 பேரில் அடங்குவர்.
அவர்களில் ஆலப்பாக்கம் ரயில் நிலைய அதிகாரி விமல் புதன்கிழமையன்று விசாரணைக்கு முன்னிலையானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விசாரணை முடிந்த பிறகு, அடுத்தகட்ட விசாரணை தொடங்கப்படும் என்றும் அதன் பின்னரே விபத்து நேர என்ன காரணம் என்பது குறித்து தெரியவரும் என்றும் சொல்லப்படுகிறது.
இவ்வேளையில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ரயில்வே கேட்களில் தமிழ் பேசக்கூடிய கேட்கீப்பர்கள் இல்லை என்று தமிழகச் சட்டமன்ற நாயகர் அப்பாவு தெரிவித்திருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
சிறையில் அடைப்பு
இதற்கிடையே, கடலூர் விபத்து தொடர்பில் கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மாமீது கொலை வழக்கு, மரணத்திற்குக் காரணமாக இருத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபின் சிறையில் அடைக்கப்பட்டார்.
விபத்தைத் தொடர்ந்து செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக தமிழ் பேசத் தெரிந்த ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே தமக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.