சென்னை: கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் வெளி ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விமானக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
கூட்டம் அதிரித்துள்ளதால் ரயில், பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள், விமானத்திலாவது சென்னை திரும்ப திட்டமிடுகின்றனர்.
இவ்வாறு கடைசி நேரத்தில் விமானப் பயணச்சீட்டுகளைப் பதிவு செய்வதால்தான் கட்டணம் அதிகரிப்பதாகத் தெரிகிறது.
கடந்த இரு நாள்களாக சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
குறிப்பாக, மதுரை, துாத்துக்குடி, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து, சென்னை வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அந்த வழித்தடங்களுக்கான விமானக் கட்டணம், மற்ற நாள்களைவிட பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் சிலர் புலம்பினர்.
“சில நாள்களுக்கு முன்பு ஆகக் குறைவான கட்டணத்தில் கிடைத்த விமானப் பயணச் சீட்டுகள், தற்போது ஆயிரக்கணக்கில் அதிகரித்துவிட்டன. பள்ளிகள் திறக்கப்படுவதால் கட்டணங்களை உயர்த்துவதைவிட, விமானச் சேவைகளை அதிகரிக்க வேண்டும்,” என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


