செங்கல்பட்டு: மாமல்லபுரத்தை அடுத்த பேரூர் பகுதியில் ரூ.4,077 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையின் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள பேரூர் பகுதியில் சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.4,276 கோடியே 44 லட்சம் செலவில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, இந்தத் திட்டப் பணிகள் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தக் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கான கட்டுமானப் பணிகளை கடந்த 2023ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். இதையடுத்து, அப்பகுதியில் குடிநீர் ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கடல்நீரை குடிநீராக்கும் புதிய ஆலையின் கட்டுமானப் பணிகளை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயேன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், பொறியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

