சீமான்: தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலக்கிறது கர்நாடகா

1 mins read
e170d69f-044e-4aa5-9f4a-cf905416a935
தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக தொழிற்சாலையின் கரிமக் கழிவுகள் கலப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தென்பெண்ணை ஆற்றின் அணையில் தேக்கப்படும் பாசனநீர் ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு ஆற்றுப் படுகையிலுள்ள கிராமங்களின் குடிநீர்த் தேவையையும் நிறைவு செய்கிறது. மேலும், அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் கரையோர மக்கள் மீன்பிடித்தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகாவின் தொழிற்கூடங்கள் பலவற்றின் கரிமக் கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் கலக்கப்படுகின்றன. அதனால் ஆற்றுநீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசடைந்து வருகிறது. இதனால் அந்த ஆற்றின் பல பகுதிகளில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண ஆவண செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தென்பெண்ணை ஆற்றுநீரை ஆய்வு செய்ததில் நீரின் காரத்தன்மை மற்றும் அமோனியா, நைட்ரேட் ஆகியவற்றின் அளவுகள் அதிகரித்தும், ஆக்சிஜன் அளவு குறைந்தும் உள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக தொழிற்சாலையின் கரிமக் கழிவுகள் கலப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,” என்று கூறியுள்ளார். கழிவுநீர் கலப்பதை உடனடியாக நிறுத்தக்கோரி வழக்குத் தொடுக்க வேண்டும் என்று சீமான் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்