சென்னை: சென்னைக்கு அருகே மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 2) 110வது விதியின்கீழ் அவர் சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
மக்களுக்குத் தேவையான குடிநீரைத் தடையின்றி வழங்கும் வகையில் பல்வேறு குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மீஞ்சூர் குடிநீர்த் திட்டம் மூலம் வடசென்னை, ஆவடி, பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்றார்.
இத்திட்டத்தின்கீழ் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீர் குடிநீராக்கப்படும். இதற்கு ரூ.4,800 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
“சென்னையின் புறநகர்ப் பகுதியான ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
“மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள், 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ஆயிரம் கோடி ரூபாயும் பழைமையான 33 கூட்டுக்குடிநீர்த் திட்டங்களைச் சீரமைக்க முதற்கட்டமாக 300 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்,” என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


