சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தை அடுத்து அனைத்து பல்கலைக்கழக, கல்லுாரி வளாகங்களில் அடுத்த ஆண்டு (2025) ஜனவரிக்குள் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று தமிழ்நாட்டு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
“இதுபோன்ற சம்பவங்களில் புகார் அளிப்பதற்கென்று ஒரு குழுவை அமைத்துள்ளோம். அந்த குழுவுக்கு புகார் ஏதும் வரவில்லை” என்றும் அவர் கூறினார்.
காவல் துறைக்கு புகார் மனு சென்றபின் பல்கலைக்கழகத்துக்கு செய்தி வந்தது. அதன்பின், பதிவாளர் உள்ளிட்ட நிர்வாகமும், உயர்கல்வித்துறை அமைச்சரான தானும், காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக அமைச்சர் விளக்கினார்.
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கில் விசாரணை நடத்துவதாகக் கூறியுள்ளது. அதற்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றார் அமைச்சர்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சட்ட பாதுகாப்பும், மனநல ஆலோசனையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை விசாரிக்க பதிவாளர், பேராசிரியர்கள், மாணவ பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவில், இதுபோல பாதிக்கப்பட்ட வேறு யாராவது இருந்தாலும், அவர்கள் ரகசியமாக புகார் அளிக்கலாம். தொடர்புகொள்ள கைத்தொலைபேசி எண் விவரங்களும் தரப்படும் என்று அமைச்சர் சொன்னார்.
இந்நிலையில், பல்கலை வேந்தரான ஆளுநர் ரவி, சனிக்கிழமை (டிசம்பர் 28ஆம் தேதி) நண்பகல் 12:30 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.