புதுடெல்லி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கோரியதை அடுத்து, அவர் மீதான பாலியல் வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் உறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக புகார் எழுப்பியிருந்தார் நடிகை விஜயலட்சுமி. சீமான் மீது காவல்துறையிலும் புகார் அளித்தார்.
இதையடுத்து, சீமான் மீது மோசடி, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து காவல்துறை விசாரித்து வந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி சீமான் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையெனில் சீமானைக் கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட தடை விலக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், புதன்கிழமை (அக்டோபர் 8) சீமான் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழிப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாம் விஜயலட்சுமிக்கு எதிராக தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகவும் இனி விஜயலட்சுமி குறித்து எந்தவித அவதூறு கருத்தையும் வெளியிடக் கூடாது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
சீமானால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதால் தமக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விஜயலட்சுமி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருதரப்பும் மாறி மாறி மன்னிப்பு கோரியதை அடுத்து, பாலியல் புகார் வழக்கை முடித்து வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.