ஈரோடு: மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணாதுரையைப்போல் பிரசார மேடையில் சீமான் பேசியதைத் தொண்டர்கள் ரசித்துக் கேட்டனர் என்று தினமலர் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார். பிரசார மேடையில் அவர் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையைப் போன்று ‘மிமிக்ரி’ செய்துகாட்டித் தொண்டர்களை மகிழ்வித்தார்.
ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் மதிப்புமிக்க உரிமை, கடைசி வாய்ப்பு வாக்களிப்பது என்றும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது இரண்டு ரூபாய் என ஒரு வாக்குக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்றும் திரு சீமான் பிரசார மேடையில் கூறினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை அவர் திரு அண்ணதுரையின் குரலில் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
“காங்கிரசார் ஓட்டுக்குக் காசு கொடுப்பானேன். அந்தக் காசை வாங்கிக் கொண்டு என்னிடத்தில் ஓட்டுப் போடவேண்டும் என்று ஏழுகடல், ஏழுமலை தாண்டியிருக்கிற வெங்கடாசலபதியை அழைத்துக் கொண்டு அந்தப் பணத்தில் அடித்து சத்தியம் வாங்குவானேன் இந்த காங்கிரசார் என்று அண்ணாதுரை பேசியது இருக்கிறது.
“அந்த காங்கிரசாருக்குச் சேர்த்து அண்ணாதுரை பெயரை சொல்லி ஓட்டுக்கு 5,000 ரூபாய் கொடுக்கும் வேலையை செய்வதுதான் இந்த திராவிடம். தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பானா?” உள்ளிட்ட கருத்துகளை திரு சீமான், திரு அண்ணாதுரையின் குரலில் பேசினார்.