தி.மலை: இழந்துவிட்ட உரிமைகளை மீட்க வேண்டும், அதிகாரத்தை நிறுவ வேண்டும் எனும் பெரும் கனவோடு நாம் தமிழர் கட்சி அரசியல் களத்துக்கு வந்துள்ளதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழும் தமிழனும் எழுச்சி பெற வேண்டுமென்றால், தூய தமிழர் ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.
நாதக ஆட்சிக்கு வந்தால், வேலைவாய்ப்புகளையும் வருவாயையும் உயர்த்துவது உறுதி என்று குறிப்பிட்ட அவர், அரசின் மூலம் தரமான கல்வி, மருத்துவம், குடிநீர், தடையற்ற மின்சாரம் ஆகியவை வழங்கப்படும் என்றார்.
“நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகளை அமைத்து அனைவருக்கும் அரசு வேலை வழங்குவோம்.
“படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை தருவோம். இனி படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்,” என்றார் சீமான்.
ஆணும் பெண்ணும் சமம் என்பதை நாதகவினர் உணர்ந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதன் காரணமாகவே தேர்தலில் பெண்களுக்குச் சம வாய்ப்பையும் சமப் பகிர்வையும் வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

