சென்னை: தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்து, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக சீமான் மீது திரைப்பட நடிகை விஜயலட்சுமி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட இந்தப் புகாரை 2012ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
எனவே, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
இந்நிலையில், தனது புகார் குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டுமென விஜயலட்சுமி சார்பாக உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது சீமான் தரப்பில், தூண்டுதலின் பேரில் விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இருதரப்பு வாதங்களைச் செவிமடுத்த நீதிபதி, புகார்தாரர் தாம் முன்பு கொடுத்த புகாரை திரும்பப் பெறுவதாகக் கூறினாலும், பாலியல் வன்கொடுமை புகாரை விசாரிப்பதற்கான அதிகாரம் காவல்துறைக்கு உள்ளது என்றார்.
எனவே, இந்த வழக்கை சர்வ சாதாரணமாக முடித்துவிட இயலாது என்றும் விஜயலட்சுமி வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள சீமானின் மனுவைத் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் மூன்று மாதங்களுக்குள் இப்புகார் குறித்து சென்னை காவல்துறை விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.